சற்றே சர்ச்சைக்குரிய தலைப்பு. உள்ளே செல்லுமுன் சிறிய தன்னிலை விளக்கம். இந்த கட்டுரை தனிப்பட்ட என்னுடைய கருத்து மற்றும் என்னுடைய தேடல் அல்லது ஒரு ஆதங்கம் மட்டுமே. நான் மத நம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ அல்லாதவன் அல்ல. அதே நேரத்தில் மனத்தில் எழும் கேள்விகளுக்கு விடை காண முயல்கிறேன்.
மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே உலகில் பல உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி கண்டு மனிதர்கள் வந்திருக்க வேண்டும். ஆறாம் அறிவு பெற்ற மனிதன் தனக்கு புரியாத பல கேள்விகளுக்கு விடை தேடும் பொழுது கடவுள் விடையாகின்றார். உலகில் தோன்றிய அனைத்து மதங்களின் குறிக்கோளும் மனிதனை நல்வழி படுத்தவே ஏற்பட்டது அல்லது முற்பட்டது.
ஆனால் மதங்களின் பேராலேயே நாம் சண்டையிட்டு கொண்டோம். மதங்களுக்குளேயே சண்டையிட்டோம். இந்தியாவில் சைவம், வைணவம், கௌமாரம், கணபத்யம், சாக்தம் (புத்தம்), சமணம் பலவாக இருந்தது. அரசுகளின் ஆதரவை பொறுத்து மதங்கள் வளரவும் தேயவும் செய்தன. தமிழ்நாட்டிலும் அனல் வாதம், புனல் வாதம் என சண்டையிட்டு தோற்றவர்களை கழுவேற்றியதும் உண்டு. இன்றைக்கும் அதை கோவில்களில் திருவிழாக்களாக கொண்டாடி வருகிறோம்.
இஸ்லாமியர்களும் தங்களுக்குள் சன்னி மற்றும் ஷியா என சண்டையிட்டு கொண்டதே வளைகுடா நாடுகளுக்கிடையே போர்களுக்கு அடிப்படை காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
கிருத்துவர்களும் கத்தோலிக்கர்கள் பிராட்டஸ்டண்டுகள் என சண்டையிட்ட வரலாறு ஐரோப்பிய நாடுகளில் காண்கிறோம். சிலுவை போர்கள் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் சண்டையிட்டதை சரித்திரம் சொல்கிறது.
அன்பு செலுத்த தெரியாதவர்கள் கடவுளை அறியாதவர்கள். அன்பும் கடவுளும் ஒன்று தான் என் பைபிள் கூறுகிறது.
அல்லாவும் அன்பும் ஒன்று என குர்ஆன் சொல்கிறது. புத்தமும் சமணமும் கூட அன்பையே வலியுறுத்துகிறது.
நம்முடைய முன்னோர்கள் அனுபவ ரீதியாக அறிந்த அறிவியல் உண்மைகளை மத வழிபாடுகளோடு இணைத்துள்ளனர். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் இடி தாங்கியை கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் ஊருக்கு நடுவில் உயரமான கோபுரத்தை கட்டி அதன் உச்சியிலே கோபுர கலசங்களை வைத்தோம். அவை இடி தாங்கிகளாக மட்டும் அல்ல. நம்முடைய வீரியமான விதைகளை தேடி பாதுகாக்கவும் உதவியது. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் பெயரில் அந்த தானியங்களை எடுத்து சுழற்சி செய்தனர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தல விருட்சம் என மரங்களின் முக்கியத்துவத்தை குறிப்பாக பிராண வாயுவை அதிக அளவில் வெளியிட கூடிய மரங்களாக வைத்தனர்.
சிவ பெருமான் குடும்பத்தை எடுத்துக் கொள்ளுவோம். சிவனின் வாகனம் காளையான நந்தி. பார்வதி தேவியின் வாகனம் சிங்கம். சிவனின் கழுத்தில் இருப்பது பாம்பு. முருகனின் வாகனம் மயில். விநாயகரின் வாகனம் எலி. இப்படி உயிர் சுழற்சியையும் நமக்கு கூறுகிறது. அரசியலில் எப்படி நிரந்தர எதிரிகளோ நண்பர்களோ கிடையாதோ அது போல் அனைத்து உயிரினங்களும் இறைவன் முன்னிலையில் சேர்ந்து வாழ்கின்றன.
விஷ்ணுவின் படுக்கை பாம்பாக இருக்கிறது. பாம்பின் எதிரி கருடன் அவருக்கு வாகனமாக இருக்கிறது. நாம் வாழ பிறரை அழிக்க வேண்டாம் என உணர்த்துகிறது. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் பாலின் முக்கியத்தை நன்றாக விளக்குகிறார். கண்ணணும் ஏசுவும் மேய்ப்பர் குளத்தில் பிறந்து மாடுகளின் முக்கியத்தை வலியுறுத்தினர். நியூ ஸிலாந்து பொருளாதாரத்தை பார்க்கையில் பசு மற்றும் பாலின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால் இங்கே அது வியாபார பொருளாக மட்டும் பார்க்கப் படுகிறது. ஆனால் நம் விவசாயிகள் மாடுகளை உண்மையான அன்புடன் குடும்பத்தில் ஒருவராக நடத்துகின்றனர்.
பண்டைய இந்திய கல்வியில் சமணர்கள் மற்றும் பௌத்தர்களின் தொண்டு அளப்பரியது. இன்றைய கல்வியிலும் சுதந்திர போராட்டங்களிலும் இஸ்லாமியர்கள் பங்கு உள்ளது. கிறித்துவர்கள் தான் முதலில் நம்முடைய தமிழ் நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து அச்சுக்கு கொண்டுசென்றனர். இன்றைக்கும் நமது ஓலைச்சுவடிகள் பத்திரமாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா நாட்டின் பெட்டகங்களில் உறங்கி கொண்டிருக்கின்றன.
அவரவர் மதங்களை பாதுகாக்க மற்ற மதங்களை எதிர்க்க வேண்டாம். தங்கள் மதங்களை மற்றவர் மீது திணிக்க வேண்டாம். தங்களுடைய மதம் என்ன கூறுகிறதோ அதை கடைபிடித்தாலே போதும்.
இதையே திருவாய்மொழியில் நம்மாழ்வார் இப்படி எழுதுகிறார்.
“அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.”
இதையே திருமூலர் திருமந்திரத்தில்
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்கிறார்.
மேலும் அவரே பின் வருமாறு கூறுகிறார்.
“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”.
கபீர் தாஸ், மகாத்மா காந்தியடிகள், குரு நானக், எல்லா மதங்களையும் சேர்த்து புதிய மதம் படைக்க முயன்ற அக்பர், படைகள் இன்றி புத்த மத கொள்கைகள் மூலம் இலங்கை, சீனம், ஜப்பான் என கீழை நாடுகளை அன்பினால் வென்ற அசோகர் முதலியவர்கள் சொல்லாததை நான் சொல்ல வர வில்லை.
இயந்திரமயமாவதின் வளர்ச்சியில் நாமே சிறிது சிறிதாக அறிவியல் பிடியில் உள்ளோம். இனி வரும் காலங்களில் இயந்திரங்களிடம் இருந்து மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டி போராட்டம் நடத்த வேண்டி வரலாம்.
மனிதன் இன்றி மரங்களும் விலங்குகளும் பறவைகளும் நீர் வாழ் உயிரினங்களும் வாழும். அவையின்றி நாம் வாழ முடியாது. அமேசான் காடுகள் தீப்பிடித்து எரிகின்றது. ஒன்று புரிகிறது நன்மை செய்யும் போது நாம் கடவுளின் கையில் கருவி ஆகின்றோம். தீமை செய்யும் போது கடவுளுக்கும் மதத்திற்கும் எதிரி ஆகின்றோம். மதங்கள் எல்லாம் புனிதமே. அவை புனிதமாக இருப்பதும் பாவமாக மாறுவதும் நமது கைகளில் தான் இருக்கிறது.
“அன்பின் வழியது உயிர்நிலை” என்கிறது உலக பொதுமறையான திருக்குறள்.
எல்லா உயிரினங்களிடமும் அன்பு செலுத்தினால் ஆனந்தம் எங்கும் பொங்கும் என்பதை கூறும் ஒரு புதிய திரை பாடலின் என்னை கவர்ந்த மணி அமுதவனின் வரிகளோடு முடிக்கிறேன்.
“எல்லாமே வேணுங்கிற உனக்கு
அதில் காக்காய்க்கும் குருவிக்கும் பங்கு இருக்கு” என்பதை மறக்காமல்
“அரும்பும் எறும்பும் நம் சொந்தம்” என நினைத்து வாழ்ந்தால் நாம்
“திரும்பும் திசை எல்லாம் ஆனந்தம் “ இருக்கும்.
- சீனிவாசன் சகன்னாதன்
தமிழ் சங்கம் வைக்காட்டோ 2018-19 ஆண்டு மலரில் இருந்து ஒரு கட்டுரை