தமிழ் மக்கள் நெசவுத் தொழிலை (Handloom) பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கண்டு உணர்ந்து உள்ளனர். பருத்தி தொன்றுதொட்டு தென்னாட்டில் விளைந்து வருகிறது. பருத்தியிலிருந்து நூல் நூற்றலையும், தையலையும் தமிழர் அறிந்திருந்தனர்.
இத்தொழிலில் நுண்ணிய தேர்ச்சி பெற்று விளங்கினார்கள் என்பதை சங்கப் பாக்களால் உணர முடிகிறது. சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற
“ஆளில் பெண்டிர் தாளின் தந்த நுணங்கு நூல் பனுவல்”
ஆதரவற்ற பெண்கள் தமது சுய முயற்சியால் நூற்ற நூல் என்பதே அதனுடைய உவமையாகும். அப்பெண்களை “பருத்திப் பெண்டிர்” என்றும் அழைத்தனர்.
துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் முறையையும் கண்டுணர்ந்து காலத்தால் அழியாத வண்ணக்கலப்பு முறையை உருவாக்கியவர்கள் தமிழர்களே. அதனால் தான்,
“உடைபெயர்த் துடுத்தல்” என தொல்காப்பியம் போற்றுகிறது.
ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல; அது அழகுற விளங்க தாமரை,அல்லி,மல்லிகை அரும்பு, பிச்சிப்பூ போன்ற பூக்களின் உருவங்களையும், கோபுரம், ருத்ராட்சம், அன்னப்பட்சி, மயில், யானை போன்ற உருவங்களையும் பயன்படுத்தி ஆடைகள் நெய்யப்பட்டன. கைத்தறி ஆடை என்பது ஒரு தொழில் என்பதையும் தாண்டி அது நம் மக்களின் கலை, பொருளாதார, பாரம்பரிய பண்பாட்டு முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது.
தமிழக நெசவுக் கலையின் பெருமையை அறிந்த பண்டைய அரேபியர்களும், கிரேக்கர்களும், நீண்ட தூரம் கடல் கடந்து தமிழகம் வந்து கைத்தறித் துணிகளை வாங்கிச் சென்று அணிந்தனர் என வரலாறு கூறுகிறது. இராஜராஜசோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்து மகளிர் பட்டிலும் பஞ்சிலும் நெய்த ஆடைகள் பல அணிந்து வந்துள்ளனர்.
“சின்ன சின்ன இலை பின்னி வருகுது
சித்திரை கைத்தறி மின்னி வருகுது” என்று பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம் பாடலே எழுதியுள்ளார். தனித்தனி பாவு நூல்களை இறுகப் பிணைத்து நெய்ய அது வனப்பும் மென்மையும் நிறைந்த அழகிய ஆடையாக்கிவிடும்.
இதில் காஞ்சிபுரத்திற்கு முதன்மை இடம். வெளிநாட்டினர் ஆச்சரியப்படும் வகையில் வரலாறு படைத்தது காஞ்சிபுரம் பட்டு புடவைகள். பரம்பரை பரம்பரையாக பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். அதற்கு அடுத்து ஆரணி, திருபுவனம், சின்னாளப்பட்டி, சேலம், கோவை, மதுரை, சத்தியமங்கலம் என்று பல பகுதிகளில் கைத்தறி நெசவு செய்யப்படுகிறது. இதில் காஞ்சிப்பட்டு,சேலம் வெண்பட்டு,மதுரை சுங்கடி,ஆரணி பட்டு, கோவை காட்டன் சேலைகள் புவிசார் குறியீடு (Geographical Indication) அந்தஸ்தை பெற்றுள்ளது என்பது தமிழராகிய நமக்கு பெருமை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல பஞ்சாலைகள் தொடங்கப்பட்டு அதே நேரத்தில் கைத்தறிகள் செயலிழந்து போயின.தமிழர்களின் பண்டைய பெருமை மீட்கப்படும் முயற்சிகள் தொடங்கி உள்ள இக்காலத்தில் கைத்தறி நெசவும் காக்கப்பட வேண்டும். இசைக்கலை,நாட்டியக்கலை எப்படி தமிழ் பண்பாட்டிற்கு முதன்மையோ அதேபோல் தமிழர் மரபு தொழில்நுட்பமான நெசவு கலையும் சிறப்பு வாய்ந்ததே.
தமிழகத்தில் தொன்று தொட்டு நடந்து வரும் கைத்தறி நெசவுத் தொழிலை போற்றுவோம். கைத்தறிக்கு கைகொடுப்போம்.கைத்தறித் துணிகள் நம் தமிழரின் பெருமை.
கல்பனா அசோக்குமார்
தமிழ் சங்கம் வைக்காட்டோ 2019-20 ஆண்டு மலரில் இருந்து ஒரு கட்டுரை